செய்தி விவரங்கள்

பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அதிகாரம் செய்வது யாப்பாக அமையாது

அரசியல் யாப்பு என்பது பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை ஆளுவதற்கான அதிகாரத்தை வழங்கும் ஒரு விடயமல்லவென தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதி பிரதம நீதியரசர் மொசெனெகே தெரிவித்துள்ளார்.

மாறாக சகல இன மக்களுக்கும் சமமான உரிமைகளை உறுதிப்படுத்துவதே ஒரு சிறந்த அரசியலமைப்பாக இருக்குமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பான மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அரசியலமைப்பு சபை செயலகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் விசேட விருந்தினராக பங்கேற்ற, தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதி பிரதம நீதியரசர், “அரசியலமைப்பு மீதான ஒருமித்த கருத்து தென்னாபிரிக்காவின் அனுபவங்கள்“ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், போதியளவு கலந்துரையாடல்களை நடத்துவதன் ஊடாகவே சிறந்ததொரு அரசியலமைப்பை உருவாக்க முடியுமெனக் குறிப்பிட்டார்.

சகல தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவது என்ற உத்தியைக் கையாண்டதன் ஊடாகவே தென்னாபிரிக்காவின் அரசியலமைப்பை வெற்றிகரமாகத் தயாரிக்க முடிந்ததாக அவர் வலியுறுத்தியுள்ளா்.

காலணித்துவ ஆட்சியிலிருந்த தென்னாபிரிக்கா சுமார் பல வருட யுத்தத்துக்கு முகங்கொடுத்த நிலையிலேயே அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சகல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்துவது என்பது நாம் முதன் முதலில் அடிப்படையாக முடிவுசெய்த விடயம். 'பேச்சுவார்த்தைகள் பற்றிய கலந்துரையாடல்கள்' முதலில் முன்னெடுக்கப்பட்டன. குழப்ப காலத்தில் ஒருவரால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கலாம். சகல தரப்புடனும் நாம் கலந்துரையாடினோம்.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் ஊடாக இடைக்கால அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்பட்டதோடு, நான்கு வருட கலந்துரையாடல்களின் பின்னர் 1993ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் இடைக்கால அரசியலமைப்பு சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் தொடர்ந்தமையால் மக்களின் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களால் அரசியலமைப்பை தயாரிக்கும் சூழல் இருக்கவில்லை எனவும்,  அரசியலமைப்பின் சட்டபூர்வத்தன்மை குறித்தும், ஏனைய விடயங்கள் குறித்தும் மக்களுடன் பரந்துபட்ட கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, எல்லையில் உள்ள படையினரை தக்கவைப்பது, மோசமான சட்டங்களை நீக்குவது போன்ற நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயற்பாடுகளையும் தென்னாபிரிக்கா முன்னெடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

போதியளவு கலந்துரையாடல்களை நடத்துவது என்ற உத்தியை பயன்படுத்தியே அரசியலமைப்பை நாம் வெற்றிகரமாகத் தயாரித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலந்துரையாடல்களின் போது இணக்கப்பாடு ஏற்படாத சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவிட்டு இடைவெளி எடுத்துக் கொண்டதாகவும் நிலைமை சுமுகமானதும் மீண்டும் அது பற்றிய பேச்சுக்களை ஆரம்பித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

போராளிகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலானவர்கள் அதிகாரிகளாக இருந்தமையால், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடாது என ஒரு சாராரும், மன்னிப்பு வழங்க வேண்டும் என பிறிதொரு சாரார் வலியுறுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கலந்துரையாடல்களை நடத்தி அடிமட்டத்தில் இணங்கக் கூடியதொரு விடயத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அதனை இடைக்கால அரசியலமைப்பில் உள்ளடக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான விடயங்களில் சகல தரப்பினரின் கருத்துக்களையும் கவனமாக செவிமடுத்து இறுதியாக இணங்கக் கூடிய எல்லையில் இணக்கத்தை ஏற்படுத்துவதே பொருத்தமான அணுகுமுறையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

காணிப் பிரச்சினை, சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகள் இந்த நடைமுறையைப் பயன்படுத்தியே தீர்வுகாணப்பட்டதாகவும் தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதி பிரதம நீதியரசர் மொசெனெகே மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு