செய்தி விவரங்கள்

பெண் கைதி மர்ம சாவு... சிறையில் பெண் கைதிகள் கலவரம்...

மும்பையிலுள்ள பைகுல்லா சிறையில் நடந்த கலவரத்தில் பெண் கைதி ஒருவர் பலியானார். கலவரத்தில் இந்திராணி முகர்ஜிக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்திராணி முகர்ஜி பைகுல்லா சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த மகளிர் சிறைச் சாலையில் வெள்ளிக்கிழமை கைதிகளிடையே மோதல் ஏற்பட்டது. அதில் கைதி ஒருவர் இறந்துவிட்டார். இதனால் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தின் போது பெண் கைதிகள் கட்டடத்தின் மேற்கூரையில் ஏறி நின்று போராட்டம் செய்தனர்.

பெண் கைதிகளை போராட்டம் நடத்த இந்திராணி முகர்ஜி தூண்டியதாக சிறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முயற்சித்தால் தங்கள் குழந்தைகளை கேடயமாக வைத்துக் கொள்ளும்படி சிறை கைதிகளை அவர் தூண்டியதாகவும் தெரிகிறது. இதனால் இந்திராணி உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், சிறையில் பெண் கைதி ஒருவர் திருடியதாகவும், அவரை போலீஸார் தாக்கியதில் அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே சிறையில் கலவரம் வெடித்ததாக இன்னொரு தகவல் கூறுகிறது. பெண் கைதியை தாக்கிய விவகாரத்தில் சிறைக் காவலர் உள்ளிட்ட 5 காவல்துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திராணி தனது முதல் கணவர் மூலம் பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு