செய்தி விவரங்கள்

பாதையினை திருத்தி தருமாறு கோரி கற்களை வீதியில் போட்டு எதிர்ப்பு நடவடிக்கை!

நுவரெலியா மாவட்டத்தின், ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் ஸ்டிரதன் தோட்ட பாதையான,
ஹட்டன்-கொழும்பு பிரதான பாதையினை இணைக்கும் தோட்ட பாதையினை திருத்தி தருமாறு கோரி, நூற்றுக்கும்
மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் மரங்களையும், கற்களையும் வீதியில் போட்டு இன்று(11.01.2018)எதிர்ப்பு
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பாதையினை திருத்தி தருமாறு கோரி கற்களை வீதியில் போட்டு எதிர்ப்பு  நடவடிக்கை!

சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை உள்ள இப்பாதை பல வருட காலமாக குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இதனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றும் ஒரு கர்ப்பிணித் தாய், கொண்டு செல்லும் போது வழியிலேயே குழந்தை பிரசவித்ததாகவும், பல தடைவைகள் இவ் வீதியினை திருத்தி தருமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும், அவர்கள் எவ்வித நடவடிக்கை எடுக்காததன் காரணமாக எதிர்ப்பு நடவடிகையில் ஈடுப்பட்டதாக, தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் இவ்வீதி, குன்றும் குழியுமாக காணப்படுவதனால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். பொருட்களை கொண்டு வருவதற்கும், நோயாளர்களை கொண்டு செல்வதற்கும், பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்புவதற்கும், கூலி வாகனங்களுக்கு அதிக பணம் செலுத்த வேண்டிய நிலை காணப்பட்டு வருகின்றது. அத்தோடு, அடிக்கடி வாகனங்கள் பழுதடைவதனால், பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன.

 இதன் போது எதிர்ப்பு நடவடிக்கை இடத்திற்கு வருகை தந்த ஹட்டன் பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் ஜெமில், இந்த வீதி குறித்து தோட்ட நிர்வாகத்திற்கு மக்கள் சார்பாக கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்து, இதனை தீர்ப்பதற்கு முயற்சி எடுப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து மக்கள் வீதியில் போடப்பட்ட தடைகளை அகற்றி களைந்து சென்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு