செய்தி விவரங்கள்

காசோலை வழக்கில் கைது செய்யப்பட்டவரின் விளக்கமறியல் நீடிப்பு

காசோலை வழக்கில் கைது செய்யப்பட்டவரின் விளக்கமறியல் நீடிப்பு


காசோலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்.நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு நேற்றைய தினம் புதன் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த நபரை பொலிசார் மன்றில் முற்படுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் தெரியவருவதாவது......

குறித்த சந்தேகநபர் யாழில் உள்ள வர்த்தகர்களுக்கு இடையில் இடைத்தரகராக செயற்பட்டு காசோலைகளை கொமிசன் வைத்து வட்டிக்கு மாற்றி கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் வர்த்தகர் ஒருவர் சக வர்த்தகர் ஒருவருக்கு கொடுத்த காசோலை ஒன்றினை குறித்த இடைத்தரகர் வேறு நபரிடம் கொடுத்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் இடைத்தரகருக்கு காசோலையை கொடுத்த வர்த்தகர் கடன் தொல்லை காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார். காசோலையை பெற்று பணம் கொடுத்த நபர் இடைத்தரகரிடம் பணத்தினை கேட்ட போது காசோலையில் பெயருள்ள நபரிடம் பணத்தினை பெற்றுக்கொள்ளுமாறு கோரி வந்துள்ளார்.

இதனையடுத்து பணம் கொடுத்தவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போது காசோலை உரிமையாளர் , தனது உறவினரான வர்த்தகருக்கு நம்பிக்கை அடிப்படையில் காசோலையை வழங்கியதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பொலிசார் காசோலை உரிமையாளரின் உறவினரான வர்த்தகரிடம் விசாரித்த போது , தற்கொலை செய்து கொண்ட வர்த்தகருக்கு தான் காசோலையை வழங்கியதாகவும் அதற்காக பணம் எதனையும் பெறவில்லை எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பொலிசார் யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். குறித்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் 07ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது காசோலை உரிமையாளர் மற்றும் காசோலை உரிமையாளரின் உறவினரான வர்த்தகர் ஆகிய இருவரும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுப்பட்டனர்.

அதன் போது காசோலையை பெற்றுக்கொண்டு பணத்தினை வழங்கிய நபர் அவர்கள் இருவரையும் தனக்கு யார் என தெரியாது எனவும் , தான் வேறு ஒருவரிடம் தான் காசோலையை பெற்று பணத்தினை கொடுத்ததாக மன்றில் சாட்சியம் அளித்தார்.

இதனை தொடர்ந்து இருவரையும் பிணையில் செல்ல நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் காசோலையை கொடுத்து பணத்தினை வாங்கிய நபரை மன்றில் முற்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது , காசோலையை கொடுத்து பணத்தினை வாங்கிய நபரை பொலிசார் முற்படுத்தினார்கள். இதை அடுத்து நீதிவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

குறித்த நபர் யாழ்.வர்த்தகர்களுக்கு இடையில் கொமிசன் வைத்து காசோலைகளை மாற்றி கொடுக்கும் இடைத்தரகராக செயற்பட்டு வருபவர் எனவும் அவருக்கு யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிலர் மத்தியில் அதீத செல்வாக்கு உள்ளது எனவும் அறிய முடிகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு