செய்தி விவரங்கள்

அதிகாரத்தை பரவலாக்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் இணக்கம்: பிரதமர் ரணில்

புதிய அரசியல் யாப்பின் ஊடாக அதிகாரத்தை பரவலாக்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தெளிவான இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அதேவேளை புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் நடவடிக்கையின் போது மக்களாலும் புத்திஜீவிகளாலும் முன்வைக்கப்பட்ட கருத்துகள் அடங்கிய விவாதத்திற்கு உட்படுத்தக்கூடிய அறிக்கையொன்றை முதலில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு வழி நடத்தல் குழுவின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அதன் உறுப்பினர்களும் அரசியல் யாப்பு தொடர்பான நிபுணர்களும் நேற்று மக்களை தெளிவுப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த போதே ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தத் தகவல்களை முன்வைத்திருக்கின்றார்.

கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் புதிய அரசியல் யாப்புத் தயாரிப்புப் பணிகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

அரசியல் யாப்பு வழி நடத்தல் குழுவின் தலைவரான ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்தக் கருத்தரங்கில் அரசியல்யாப்பு தொடர்பான நிபுணர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

ரணில் விக்கிரமசிங்க –' அரசியலமைப்பின் பல்வேறு விடயங்களில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. விசேடமாக அதிகாரப் பகிர்வு விடையத்தில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

மற்றும் அரசின் தன்மை குறித்தும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. நாடு பிரிக்கப்பட முடியாது என்ற விடயத்தில் நாம் அனைவரும் இணங்கியுள்ளோம். இறையாண்மை என்பது மக்களின் வாழ்க்கை. மற்றும் மாகாணங்களுக்கு அதிகபட்ச அதிகாரங்களை உறுதிப்படுத்தும் வகையில் அது சில மத்திய கட்டமைப்புக்கள் ஊடாகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அனைத்து கட்சிகளும் மாகாண நிர்வாக கட்டமைப்பில் அங்கம் வகித்துள்ளன. 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டு இவ்வாண்டுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அடுத்த வருடத்துடன் மாகாண சபைகள் அமைக்கப்பட்டு 30 வருடங்கள் நிறைவடைகின்றன.

முதல் கட்டமாக ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்தது.

அதன்பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சி அமைத்தது. ஜே.வி.பி யும் அமைச்சு பொறுப்பை வகித்திருந்தது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தற்போது ஆட்சி அமைத்துள்ளது.

அதற்கமைய மாகாண சபை நிர்வாகம் தொடர்பில் அனைத்துத் தரப்பினருக்கும் அனுபவம் உள்ளது. முன்னைய பிரிவு தற்போது இல்லை.

ஒரு பிரிவு மாத்திரமே உள்ளது. மாகாண சபை முதல்வர் அதிக அதிகாரம் வேண்டும் என கேட்கின்ற அதேவேளை மத்தியிலுள்ள கட்சிகள்; அந்த அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடுகின்றன.

அது மாத்திரமே தற்போதுள்ள பிரிவாக காணப்படுகின்றது. அதிகாரம் எவ்வாறு பிரயோகிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் அரசியல் கட்சிகள் மாகாண சபைகள்இ நாடாளுமன்றம் என்பவற்றறுக்கிடையில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

புதிய அரசியல் யாப்பின் ஊடாக தற்போது நடைமுறையில் உள்ளது போல் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை தொடர்ந்தும் உறுதிப்படுத்தப்படும் என்றும் ஸ்ரீலங்கா பிரதமர் திட்டவட்டமாக அறிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க – ' பௌத்தத்திற்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை நீக்க வேண்டும் என யாரும் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை. அனைத்து சமயங்களையும் அழுத்தங்களுக்கு உள்ளாகாமல் இருப்பதை உறுதிசெய்வதே தற்போதுள்ள கேள்வி.

இது வெளிநாட்டில் இருந்து பரவிய சமயத்திற்கு மாத்திரமல்லாமல் பௌத்த சமயத்திற்கும் பொருந்தும். அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிஇ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றுக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இடையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தேர்தல் முறைமை அரச அதிகாரம் நீதிமன்ற அதிகாரம் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அரசியல் யாப்பு வழி நடத்தல் குழுவின் தலைவரான ஸ்ரீலங்கா பிரதமர் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியிடத்திலுள்ள அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பிலும் ஆராய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரங்கள் தொடர்பில் புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் கீழ் இயங்கும் ஆறு உப குழுக்கள் ஆராய்ந்துவருவதுடன் அதற்கமைய புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய சிறந்த அரசியல் யாப்பொன்றை தயாரிக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்கு நீண்டகாலம் எடுக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு