செய்தி விவரங்கள்

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு ஒர் நற்செய்தி

காணாமல் போனோர் அலுவலகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்றைய தினம் கையெழுத்திட்டுள்ளார்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசு உதாசீனமாக செயற்படுவதாக நேற்றைய தினம் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் கடும் கண்டனத்தையும் விசனத்தையும் வெளியிட்டிருந்த மறுநாள் இந்த வர்த்தமானி அறிவித்தலில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் கையெழுத்திட்டிருக்கின்றார்.

இறுதிக்கட்டப் போரின் போது ஸ்ரீலங்கா இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட, சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட நிலையிலும், கடத்தப்பட்டும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களையும், அதற்கு முன்னரும் பின்னரும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களையும் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் 200 நாட்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் திகதி காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் நிறைவேற்றியிருந்தது.

எனினும் குறித்த சட்டமூலத்தில் திருத்தங்களை செய்ய வேண்டி இருப்பதாகக் கூறி கடந்த ஒரு வருடங்களாக குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை இழத்தடிப்பு செய்து வந்தது.

இந்த நிலையில் காணாமல் போனோர் அலுவலக திருத்தச் சட்டமூலமும் ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட போதிலும் குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சராக இருக்கும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி காணாமல் போனோர் அலுவலக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளார்.

இதற்கமைய செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் காணாமல் போனோர் அலுவலகம் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு