செய்தி விவரங்கள்

இந்தியாவில் புரட்சிமிகு #Not In My Name போராட்டத்திற்கு காரணம் தெரியுமா...?

இறைச்சிக்காக மாடுகளை கொண்டு செல்வதாக எழும் சந்தேகத்தின் போரில் சிறுபான்மையினர் மீதாக தாக்குதல்கள் நடத்தப்படுவதை கண்டித்து பெருநகரங்களில் சமூக ஆர்வலர்கள் தொடங்கிய நாட் இன் மை நேம் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ஹரியானா மாநிலம் பல்லப்கார் அருகே உள்ள கண்டோவா கிராமத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான ஜூனைத், ஹசிப், ஷாகிர் ஆகியோர் டெல்லி சர்தார் பஜாரில் ரம்ஜானையொட்டி பொருள்கள் வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு லோக்கல் ரயிலில் சென்றனர். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சகோதரர்கள் மூவரும் முண்டியடித்துச் சென்று இடம் பிடித்தனர். அப்போது அவர்களுக்கும் மற்ற பயணிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. சகோதரர்கள் தங்களுடன் ஒரு பையில் ரம்ஜான் பொருள் மற்றும் உணவு எடுத்துச்சென்று இருந்ததால் மற்றவர்களுக்கு இடையூறாக இருந்தது.

அவர்கள் பையில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி சகோதரர்களை 20க்கும் மேற்பட்ட கும்பல் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியது. கத்தியாலும் குத்தினார்கள். இதில் ஜூனைத் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.மற்ற 2 சகோதரர்கள் படுகாயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் ரயில்வே போலீசார் வந்து உடலை மீட்டனர். இதே போன்று ஜார்க்கண்ட் மாநிலம் பாரியாபாத்தில் பால் பண்ணை உரிமையாளர் உஸ்மான் அன்சாரி வீட்டிற்கு அருகே தலையில்லாமல் பசுவின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் கூடிய பசுப் பாதுகாவலர்கள் மற்றும் சில கும்பல் அவருடைய வீட்டை தீ வைத்து கொளுத்தியதோடு உஸ்மானையும் கடுமையாக தாக்கினர்.

பசுப் பாதுகாவலர்களால் நடத்தப்படும் இது போன்ற தாக்குதல்களைக் கண்டித்து குர்கானைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் தேவன் முதன் முதலில் போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து நேற்று டெல்லி ஜந்தர் மந்தரிலும் பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். அந்த போராட்டத்தில் தாக்குதலில் உயிரிழந்த 17 வயது ஜூனைத் அவரது தாயாருக்கு எழுதிய கடிதம் என்று இளைஞர் ஒருவர் வாசித்து காட்டிய கடிதம் அனைவரின் கண்களையும் குளமாக்கின. "அம்மா, பண்டிகைக்காக டெல்லியில் இருந்து புது ஆடைகளை வாங்கி வரச் சொன்னீர்கள், ஆனால் விதி என்னை சொர்க்கத்திற்கு அனுப்பிவிட்டது" என்று 22 வயது மாணவன் படித்துக் காட்டிய நெஞ்சை உருக்கும் கடிதம், அனைவரின் மனசாட்சியையும் தட்டி எழுப்பியது.

மாட்டிறைச்சி விவகாரத்தால் தொடரும் தாக்குதல்களை கண்டித்து நடைபெற்ற #not in my name போராட்டம் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. இதனையடுத்து நாட்டின் 10 முக்கிய நகரங்களான பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட பெருநகரங்களில் தீவிரமாகியுள்ளது. சர்வதேச நாடுகளில் உள்ள இந்தியர்களும் நாட் மை நேம் போராட்டத்தை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக இன்று லண்டன், டொரண்டோ, பாஸ்டன் உள்ளிட்ட நாடுகளில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் மற்றும் தலித்துகள் மீதான தொடர் தாக்குதல்களைப் பார்த்துக் கொண்டு அரசு ஏன் மௌனம் காக்கிறது என்பதே இந்த #not in my name போராட்டத்தின் சாராம்சம் என்கின்றனர் போராட்டக்காரர்கள்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு