செய்தி விவரங்கள்

வட மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மாகாணசபைகளுக்கான தேர்தல் ஒக்டோபரில்

வட மத்திய, சப்ரகமுவ, கிழக்கு ஆகிய மாகாணசபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வட மத்திய, சப்ரகமுவ, கிழக்கு ஆகிய மாகாணசபைகளின் பதவிக்காலம் இந்த வருட இறுதியில் முடிவடைகின்ற நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

மாகாணசபைகள் சட்டத்தின் கீழ் சபைகளின் ஆயுள்காலம் காலாவதியாகி ஒருவாரத்துக்குள் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். சட்டத்தின்படி மாகாணசபைத் தேர்தல்களை பிற்போட முடியாது.

அவ்வாறு பிற்போடுவதானால் நாடாளுமன்றத்தில் சமூகமளிக்காத உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் அதற்கான பிரேரணை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒன்றாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்து உள்ள நிலையில் மாகாணசபைகளை முன்கூட்டியே கலைத்து விட்டு தேர்தலை நடத்தலாம்.

உள்ளூராட்சி தேர்தல் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தலாம்.

இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் ஆதரவளிப்பதாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய கூட்டத்தில் உறுதியளித்துள்ளனர்.

எவ்வாறாயினும் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் தேர்தலை நடத்துவதற்கு 75 நாட்கள் காலஅவகாசம் தேவை. 55 நாட்கள் தேவை என்பது தவறு. அது மாகாணசபை தேர்தலுக்கான கால அவகாசமாகும்' என்றும் ஸ்ரீலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு