செய்தி விவரங்கள்

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டமைக்காக சட்டத்தரணி லக்சான் டயஸ் பொது மன்னிப்புக் கோர வேண்டுமென நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்திருந்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக பொது அமைப்புகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐம்பதிற்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் சுமார் 20ற்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத காலத்திற்குள் 166 கிறிஸ்தவ ஆலயங்களை பிக்குமார் தாக்கியதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சட்டத்தரணி லக்சான் டயஸ் கூறியிருந்தார்.

இது குறித்து பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் வினவியபோது அப்படியான தாக்குதல்கள் நடைபெறவில்லை என கூறியதாகவும் அமைச்சர் விஜயதாக ராஜபக்ச சுட்டிக்காட்டியிருந்தார்.

பொய்யான தகவலை கூறியமைக்காக சட்டத்தரணி மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அவர் அதனை செய்யாவிட்டால், சட்டத் தொழிலில் இருந்து அவரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.

மேலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியில் தங்கியிருக்கும் சிலர் தேவையற்ற கருத்துக்களை பரப்பி நாட்டில் ஏற்பட்டிருக்கும் சமாதான சூழலை குழப்புவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், குறித்த அமைப்புகளும் தனிநபர்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்பட்டமை நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலும் தொடர்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் மைத்திரி ரணிலின் தலைமையில் இயங்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் கருத்துச் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசாங்கத்திற்கும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கும் இடையில் இருந்த நெருக்கத்தை அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கருத்து இல்லலாமல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

அரச நிறுவனங்களின் பணியில் காணப்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்ட தயங்காத பொதுமக்களை கண்டிக்கும் அரசாங்கம் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அதற்கு பதிலாக, அவர்களை தவறான வழியில் செல்வதற்கு ஊக்குவிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை வெளியிடுவதற்கான சூழலை அரசாங்கத்திற்குள்ளும் சமூகத்திலும் உருவாக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் இணக்கத்திற்கு வந்த சில விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சீர்திருத்தத்தம், இடைக்கால நீதிப்பொறி முறை தொடர்பான பொதுமக்களின் ஆலோசனை மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நிறைவேற்றுதல் ஆகிய விடயங்களை புறக்கணிக்க முடியாது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு