செய்தி விவரங்கள்

சைபர் தாக்குதலுக்கு வடகொரியாவே காரணம்

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை மற்றும் உலகின் பிற அமைப்புகளின் இணையதளங்களை முடக்கிப் போட்ட கடந்த மாத இணையத் தாக்குதலின் பின்னணியில் வட கொரியாவைச் சேர்ந்த இணைய தாக்க ஊடுருவல்காரர்கள் இருந்ததாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நம்புகிறார்கள் என பிபிசி அறிந்துள்ளது.

பிரித்தானியாவின் தேசிய இணையப் பாதுகாப்பு மையம் இது குறித்த சர்வதேசப் புலன்விசாரணையை நடத்தியுள்ளது.

லாசரஸ் (Lazarus) என்று அறியப்படும் இணைய ஊடுருவல் குழு இந்தத் தாக்குதலைத் தொடுத்தாக அந்த மையம் நம்புவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.

அமெரிக்காவின் கணினி அவசர உதவிக் குழுவும் லாசரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்தக் குழுதான் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது 2014 -ஆம் ஆண்டு இணைய தாக்குதல் நடத்தியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

வட கொரிய அரசின் தலைமையை கேலி செய்யும் வகையில், சேத் ரோஜென் நடித்த `த இண்டர்வியு' எனும் ஆங்கிலத் திரைப்படத்தை அந்நிறுவனம் வெளியிடத் திட்டமிட்டிருந்த சமயத்தில் அத்தாக்குதல் நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து சிறிய காலதாமதத்துக்குப் பின்னர் அந்தப் படம், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் திரையிடப்பட்டது.

வங்கிகளில் இருந்து இணையம் மூலம் பணம் திருடப்பட்டதன் பின்னணியிலும் இந்தக் குழு இருப்பதாக நம்பப்படுகிறது.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைகள் பாதிப்பு

கடந்த மே மாதம் வானாக்ரை என்ற பெயரில் உலகின் பல நாடுகளில் உள்ள கணிப்பொறிகளில் ஊடுருவி, அதிலுள்ள தகவல்களைக் கைப்பற்றி அவற்றை பயனாளிகளின் கட்டுப்பாட்டுக்கு மீண்டும் விடுவிக்க பிணைத்தொகை கோரியது. பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையும் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.

இது குறித்த புலன் விசாரணையைத் தொடங்கிய பிரிட்டனின் தேசிய இணைய பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சமீப வாரங்களில் தமது முடிவுகளை இறுதி செய்தனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு