செய்தி விவரங்கள்

27 வருடங்கள் சென்றும் நீதி மறுக்கப்படும் படுகொலைகள்

நாட்டில் அராஜகமான, காடைத்தனமான ஆட்சி நடைபெற்றமைக்கான அடையாளங்களாக தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளை பட்டியலிட முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

படுகொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டடிக்கப்படாமல் சுதந்திரமாக நடமாடுவதாகவும் அவர்களுக்கான தண்டனைகளை நீதியின் பால் சென்று பெற்றுக்கொடுக்க வேண்டியது நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அம்பாறை வீரமுனையில் 232 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27 ஆவது ஆண்டு நினைவு தினம் நினைவு கூறப்பட்டுள்ளது.

இந்த அஞ்சலி நிகழ்வுகள் நேற்று மாலை 6.30 க்கு வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.

அத்துடன் விசேட பூசை வழிபாடுகளை தொடர்ந்து உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வும், பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள் நினைவுத்தூபிக்கு முன்னால் இடம்பெற்றது.

இதன்போது நினைவுத் துாபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

நேற்று நடைபெற்ற உயிர்நீத்த உறவுகளின் நிகழ்விற்கு முன்னால் கிராம உத்தியோகஸ்தர் பொன்னம்பலம் தலமைதாங்கியதுடன் இந்த நிகழ்வினை வீரமுனை கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் அஞ்சலி நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான தவராசா கலையரசன், மு.இராஜேஸ்வரன், இரா.துரைரெட்ணம் மற்றும் கல்முனை மாநகர முன்னாள் உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். 

இதேவேளை, 1990 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி ஊர்காவல்படை குழுவினரினால் அதிகமான பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன் அதிகளவானோர் காயமடைந்ததுடன் பலர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

இந்த படுகொலைகள் இடம்பெற்று 27 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இதுவரை நீதி கிடைக்கப்பெறவில்லையென மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்

அதேவேளை, தமிழ் மக்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் தமிழர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார்..

அத்துடன் உள்நாட்டு நீதிப்பொறிமுறைகள் வலுவிழந்தமையின் காரணமாகவே தமிழ் மக்கள் தமக்கான நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேசத்தின் உதவியை நாடியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் எதிர்காலத்திலும் இழப்புக்களை சந்திக்காகது நியாயமான தீர்வினை பெற்றுக்கொள்ள ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான தவராசா கலையரசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு