செய்தி விவரங்கள்

நீதிமன்றுக்கு சென்று மஹிந்த குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கலாம்; துமிந்த

சீத்தை விநியோக வழக்கில் தீர்ப்பளிக்க முன்னரே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகி குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கலாம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

மாறாக அதனை செய்யாமல் தீர்ப்பளிக்கப்பட்டு குற்றவாளிகள் இருவரும் சிறைதண்டனை அனுபவித்துவரும் நிலையில் குற்றத்தை ஒப்புக்கொள்வது கேவலமான விடயம் என்று சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக அரச நிதியிலிருந்து 60 கோடி ரூபாவை சீத்தை விநியோகத்திற்காக பயன்படுத்திய குற்றத்தில் மஹிந்த ராஜபக்சவின் செயலாளரான லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனூஷ பெல்பிட்ட ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 600 மில்லியன் நிதியை மோசடி செய்தமை தொடர்பிலேயே இருவரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர்.

அதனடிப்படையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கும் கடும் வேலை உடனான மூன்று வருட கடூழிய சிறை, தலா 20 இலட்சம் அபராதம், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு தலா 50 மில்லியன் நஷ்டஈட்டினையும் செலுத்துமாறு கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கொழும்பு வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இருவரையும் பார்த்துவிட்டு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சீத்தை துணிகளை விநியோகம் செய்யுமாறு தாமே உத்தவிட்டதாகவும், அதற்கான முழுப் பொறுப்பையும் தாமே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் கண்டி மல்வத்துப்பீட மகாநாயக தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டு திரும்பிய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இந்த விவகாரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.

“லலித் வீரதுங்கவை சிறைக்குச் சென்று பார்த்த பின்னர் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச, இந்த உத்தரவை பிறப்பித்தது தாமே என்றார். அதனை லலித் வீரதுங்க சிறைக்குச் சென்ற பின்னரா கூறுவது? இந்த வழக்கு இடம்பெறுகையில் மஹிந்த ராஜபக்ச, லலித் வீரதுங்கவின் சட்டத்தரணி ஊடாக இந்த உத்தரவுகளை வழங்கியது தாமே என்றும், தனது அதிகாரங்களுக்கு உட்பட்டு இந்த உத்தரவை வழங்கியதாகவும் நீதிமன்றத்தில் வைத்து ஒப்புக்கொண்டிருக்க இயன்றிருக்கலாம். அதனை செய்யாமல் குறைந்த பட்சம் தீர்ப்பு நாளில் மன்றின் வளாகத்திற்காவது சென்றிருக்கலாம். சிலர் வாக்குமூலம் அளிக்கச் சென்ற தினங்களில் பேரூந்துகளில் மக்களை அழைத்து கூட்டங்கூட்டி ஆரவாரத்துடன் சென்றதை கண்டோம். ஆனால் குறைந்த பட்சம் உத்தரவை பிறப்பித்தர் அல்லது இன்று அவருடன் இருப்பவர்களாவது நீதிமன்றத்திற்கு வந்திருக்கலாம். இந்த யதார்த்தத்தை நாட்டு மக்களும் அதேபோல மஹிந்த ராஜபக்சவுடன் இருக்கின்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். தனிமையாகும்போது உத்தரவிட்டவரும் வரமாட்டார், அவருடன் இருப்பவர்களும் வரமாட்டார்கள். சிலர் நாட்டிற்காக சிறைக்கும் செல்லத்தயார் என்கின்றனர். அதை கூடச்செய்ய வேண்டாம். தன்னால் சிக்கலில் மாட்டியிருக்கும் நபருக்காக குறைந்தபட்சம் நீதிமன்ற வளாகத்திற்குச்சரி செல்லுங்கள்.செய்த குற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.

Share this article

மேலும் தமிழ் செய்திகளுக்கு ...

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு