செய்தி விவரங்கள்

இரணைதீவு காணி விடுவிப்பு குறித்து இரண்டு வாரங்களில் அரசாங்கம் பதிலளிக்கும்

நிரந்தர காணியில் தம்மை மீள குடியமர்த்துமாறு வலியுறுத்தி தொடர் போரட்டத்தில் ஈடுபட்டுவரும் இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஸ்ரீலங்கா அரசாங்கம் பதிலளிக்கும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

காணி விடுவிப்பு குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கும், இரணைதீவு மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரணைதீவு பகுதியில் மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாக ஆராய்வதற்காக ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இன்றைய தினம் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது 58 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களைச் சந்தித்த அவர், மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

மக்கள் கருத்துக்கு பதில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், இரணைதீவு பகுதியானது ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு நடவடிக்கையில் முக்கிய தளமாக அமைவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கடல் மார்க்கமாக ஸ்ரீலங்காவிற்குள் கடத்திவரப்படும் போதைப் பொருட்களைக் கண்காணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு தேவைகளின் நிமித்தம் குறித்த பகுதியில் ராடர்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த விஜயத்தின்போது சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த மக்கள் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இரணைதீவு மக்கள் பழங்குடி மக்கள் என்றும், அந்த மக்கள் அவர்களது சொந்த நிலத்தில் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும் இரண்டு வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாதமான பதில் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடனான சந்திப்பைத் தொடர்ந்து இரணைதீவு மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே இரணைமாதா நகர் செபமாலை மாதா ஆலயத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெறுவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு