செய்தி விவரங்கள்

வெறுப்பு அரசியலை வெறுத்து சத்தியாக்கிரகம் செய்யவுள்ள பிக்குகள்

ஸ்ரீலங்காவில் வெறுப்பு மற்றும் குரோதத்தனமான அரசியல் நடத்தை காரணமாகவே இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதாக தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர்களில் ஒருவரான பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறான இயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கக்கோரி நாடளாவிய ரீதியில் விளக்கு ஏற்றி சத்தியாக்கிரகம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பெங்கமுவே நாலக்க தேரர், ஆட்சியாளர்கள் துஸ்டர்களாக மாறுவதனாலேயே இயற்கை சினமடைந்து சேதங்களை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.
 
“இந்த நாட்டிற்கு எவ்வளவு அனர்த்தங்கள் ஏற்பட்டன என்பது குறித்து நாம் எல்லோரும் அறிவோம். ஒருபுறம் வெள்ளம், மறுபுறம் குப்பை மேட்டுச் சரிவும், மண்சரிவுகளும் ஏற்பட்டு இயற்கை அனர்த்தங்கள் நிகழ்கின்றன. இவை வெறுமனே ஏற்படாது. ஆட்சியாளர்கள் துஸ்டர்களாகும்போது இயக்கை சினமடைந்து அனர்த்தங்களை ஏற்படுத்தும் என்று புத்தபெருமானின் போதனை கூறுகின்றது. இதுதான் இன்று நடக்கிறது. அதனால் குரோதம் மற்றும் வெறுப்பு ரீதியான அரசியல் நடத்தைகள் அகன்றுபோகவேண்டும் என்று கோரி சத்தியாக்கிரகம் ஒன்றை நடத்தவுள்ளோம். இயற்கை அனர்த்தத்தைப் போன்று மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அனர்த்தமும் மிகவும் பயங்கரமானது. எனவே இவைபோன்ற பயங்கரங்களும் அகன்றுபோக வேண்டும் என்று கோரி சத்தியாக்கிரகம் செய்யவுள்ளோம். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு சாத்தியமானாததினால்தான் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். இந்த சத்தியாக்கிரகம் 90 வீதமல்ல, நூற்றுக்கு நூறு வீதமும் சாத்தியமாகும். கொழும்பு கோட்டை சம்புத்தாலோக்க விகாரையில் நாளை மறுதினம் மாலை 5.28 அளவில் இந்த சத்தியாக்கிரகம் நடத்தப்படவுள்ளது” - என்றார்.
சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு