செய்தி விவரங்கள்

எல்லா பிரச்சினைக்கும் தமிழ் ஊடகங்களே காரணம்;பிரிகேடியர் பிரியங்க

எல்லா பிரச்சினைக்கும் தமிழ் ஊடகங்களே காரணம்;பிரிகேடியர் பிரியங்க

புலம்பெயர் தமிழர்களை நோக்கி வழங்கிய கை சைகையை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்ற சில தமிழ் ஊடகங்கள் திரிபுபடுத்தி காணொளியாக வெளியிட்டமையே பிரச்சினைகளுக்கு காரணம் என்று பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு கடமைகளுக்குப் பொறுப்பான பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ சாடியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தமிழீழ தேசத்தை கூறி கோஷமிட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு முன்பாக ஸ்ரீலங்கா தேசத்தை குறிப்பிட்டுக் காண்பித்ததை இட்டு தாம் மிகவும் பெருமிதம் கொள்வதாகவும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவிலுள்ள சிங்கள செய்திப் பத்திரிகை ஒன்றுக்கு நேற்று வியாழக்கிழமை வழங்கிய செவ்வியில் அவர் அதனைக் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்காவின் 70 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட கடந்த 4ஆம் திகதி, இலண்டனிலுள்ள ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் திரண்ட புலம்பெயர் தமிழ் மக்களின் ஸ்ரீலங்கா அரசின் தமிழினப் படுகொலைகளை கண்டித்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

ஏராளமான புலம்பெயர் தமிழர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வெளியில் இராணுவ சீருடையில் நின்றிருந்த தூதரக பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தனது வலது கையின் விரல்களை கழுத்திற்கு குறுக்கே அசைத்து தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக சமிக்ஞை காட்டி அச்சுறுத்தியிருந்தார்.

பிரிகேடியர் பிரியங்கவின் இந்த செயற்பாடு தொடர்பில் பெரும் எதிர்ப்பலைகள் எழுந்ததையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில மணிநேரத்தில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரிகேடியர் பிரியங்கவை மீண்டும் அப்பதவிக்கு நியமித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்காவிலுள்ள சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ விசேட நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரே எமது தலைவர், தமிழீழமே எமது தேசம் என்று கோஷம் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி, எல்லாமே முடிந்துவிட்டது என்பதை தெரிவிப்பதற்கே கழுத்தில் விரலை வைத்து கை  காட்டியதாக பிரிகேடியர் பிரியங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்படும் சில தமிழ் ஊடகங்கள் காணொளியாக தயாரித்து, கழுத்தில் விரலை வைக்கும்போது பதிவுசெய்த காணொளியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு செய்து பிரச்சினைக்குரிய விடயமாக மாற்றியமைத்திருப்பதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் விடுதலைப் புலிகளின் புலம்பெயர்ந்த குழுவினருக்கு நேரடியாக தாம் விடுத்த பதிலையிட்டும்  ஸ்ரீலங்கா பிரஜை என்ற வகையில்  பெருமிதம்கொள்வதாகவும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு