செய்தி விவரங்கள்

ஆளுநர் கைகளில் ஆணைக்குழு அறிக்கை;பரிந்துரைகள் விரைவில் அமுல்படுத்தப்படும்?

ஆளுநர் கைகளில் ஆணைக்குழு அறிக்கை;பரிந்துரைகள் விரைவில் அமுல்படுத்தப்படும்? 

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2016ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி இடம்பெற்றதாக வெளியான தகவலை அடுத்து அது குறித்து விசாரணை நடத்துவதற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது.

இதற்கமைய விசாரணைகளை நடத்திய ஆணைக்குழு தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருந்த நிலையில், நேற்றைய தினம் வியாழக்கிழமை அந்த அறிக்கையை ஜனாதிபதியின் செயலாளர் மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்திருக்கின்றார்.

குறித்த அறிக்கையில் சாட்சியங்களை மறைத்த மற்றும் பொய்சாட்சியம் கூறிய குற்றத்திற்காக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மோசடியுடன் தொடர்புடையதாக சாட்சியங்கள் மூலம் உறுதியாகிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அவரது மருமகனும், பேர்பச்சுவல் டிரசரீஸ் நிறுவன உரிமையாளருமான அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கும்படி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணை ஆணைக்குழுவை நடத்தியதற்கான அனைத்து செலவுகளையும் பேர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளவும், மோசடியாக கருதப்படுகின்ற 11,145 மில்லியன் ரூபாவை மீளப் பெற்றுக்கொள்ளவும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில் ஆணைக்குழுவின் அறிக்கை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பரிந்துரைகளை விரைவில் ஆளுநர் அமுல்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு