செய்தி விவரங்கள்

மாத்தறையில் மீட்கப்பட்ட 4 சடலங்கள்; பொருளாதார நெருக்கடியே காரணம்

மாத்தறை கம்புறுப்பிட்டிய பெரலியத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மூன்று பிள்ளைகள் அடங்கலாக நால்வரின் சடலங்களை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

குறித்த பிள்ளைகளின் தந்தை வீட்டின் கூரையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பிரதேசத்திற்கு விரைந்த பொலிஸார் சடலங்களை கம்புறுபிட்டிய வைத்தியவாலையில் ஒப்படைத்துள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் உடல்களில் எரிகாயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16, 14 மற்றும் 10 வயதான பிள்ளைகளே உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் இருவர் பெண் பிள்ளைகள் எனவும் தெரியவந்துள்ளது.

குடும்பத் தகராறு காரணமான குறித்த தந்தை மூன்று பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்தகொண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மனைவி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முன்னர் வீட்டுக்கு தீவைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிவயந்துள்ளது.

சம்பவம் குறித்து அதிகாலை வேளையிலேயே அறிந்துகொண்டதாகவும், குடும்பத்திற்குள் தகராறு ஏதுவும் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை எனவும் உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

மேலும் குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார கஷ்டமே இந்த சம்பவத்திற்கு காரணமென தற்கொலை செய்துகொண்டுள்ள நபரின் மற்றுமொரு புதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு