செய்தி விவரங்கள்

பெண்கள் வலையமைப்பின் அலுவலகம் மீதான தாக்குதல்; திருமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் காரியாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் காரியாலயம் மீது நேற்று முன்தினம் இரவு அடையாளந் தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், முக்கிய ஆவணங்கள் உட்பட பல பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன.

பெண்கள் வலையமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் முற்பகல் 10 மணியளவில் பேரணியுடன் கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அலுவலக கடமை முடிந்த பின்னர் ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதன் பின்னர் நேற்றைய தினம் காலை கடமைக்கு சமுகமளித்த போது, அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு மடிக்கணினிகள் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டி ஆகியன திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அலுவலக மலசலகூடத்தின் கூரை பிரிக்கப்பட்டு அதன் ஊடாக உள்நுழைந்த திருடர்கள், அலுவலக மேசையில் வைக்கப்பட்டிருந்த கணினியை இயக்கியுள்ளதாகவும் அலுவலகத்திற்குள் சிகரெட் துண்டொன்றும் காணப்பட்டதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வு துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டுவருவதுடன், மரபணு பரிசோதனைக்காக குறித்த சிகரெட் துண்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இன்றைய போராட்டத்தின் போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு இது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன், பெண் உரிமை மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தி போராட்டத்தின் நிறைவில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பெண்கள் வலையமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் அடையாளங்காணப்பட்டு கைதுசெய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்திய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், திருடப்பட்டுள்ள பொருட்களை உடனடியாக மீட்டத்தருமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

இன்றைய பேரணியில் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் உறுப்பினர்களுடன் நாம் இலங்கைப் பெண்கள் அமைப்பினரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு