செய்தி விவரங்கள்

வடமாகாண கல்வி அமைச்சராக இமானுவேல் ஆர்னோல்ட் பரிந்துரை

வடமாகாண கல்வி அமைச்சராக, மாகாணசபை உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட்டை நியமிக்குமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி பரிந்துரைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ். நகரில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் சார்பில், வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் 15 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இ.சரவணபவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வடமாகாண கல்வி அமைச்சராக பதவிவகித்த த.குருகுலராசா பதவி விலகியதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, புதிய அமைச்சரை நியமிப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

குருகுலராசா தமிழரசுக் கட்சியின் சார்பிலேயே அமைச்சரவையில் இடம்பெற்றவர் என்பதால், தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே அந்தப் பதவி மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் புதிய கல்வி அமைச்சராக யாழ். மாவட்டத்தில் இருந்து மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இமானுவேல் ஆர்னோல்ட்டை நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சருக்குப் பரிந்துரைக்கும் தீர்மானத்தை, கிளிநொச்சி மாவட்ட மாகாணசபை உறுப்பினர் பா.அரியரட்ணம் முன்மொழிந்தார்.

இந்த தீர்மானம் மாகாணசபை உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து புதிய கல்வி அமைச்சராக, இமானுவேல் ஆர்னோல்ட்டை நியமிக்குமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தமிழரசுக் கட்சி பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

அமைச்சர்கள் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக கடந்தவாரம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுடன், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துரையாடல் நடத்தியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாகவே நேற்றைய தினம் தமிழரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களின் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு