செய்தி விவரங்கள்

குப்பைகள் கொட்டுவதற்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

உள்ளூராட்சி நிறுவனங்களினால் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் கழிவுகள் கொட்டப்படும் போது அதற்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக உயர்ந்தபட்ச சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவினை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு வழங்கியதுடன், குறித்த பிரதேசங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவத்தினை முறைமைப்படுத்தல் தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கழிவுகளை மீள்சுழற்சி செய்தல், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிரதேசங்களில் குப்பைகளை அகற்றுதல், குறுகிய காலத்தில் சேதனப்பசளை உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரங்களை அறிமுகப்படுத்தல், கழிவு முகாமைத்துவத்தினை முறைமைப்படுத்தலுக்காக தனியார் துறையின் பங்களிப்பினை பெற்றுக்கொள்ளல், கழிவு முகாமைத்துவம் தொடர்பாக மக்களை தெளிவூட்டல், பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை குறைத்தல் தொடர்பான வர்த்தமானியை வெளியிடல் மற்றும் கழிவு முகாமைத்துவத்தை முறைமைப்படுத்தல் ஆகியன தொடர்பில்  கலந்துரையாடப்பட்டுள்ளன.

கழிவு முகாமைத்துவம் தொடர்பாக மக்களுக்கு போதியளவில் தெளிவூட்டப்படாமையே பல பிரச்சினைகளுக்கும் பிரதான காரணமாகும் என இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கழிவுகளை வகைப்படுத்தல்  தொடர்பாக விரிவான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொழும்பு நகரின் கழிவு முகாமைத்துவத்தின் தற்போதைய நிலை தொடர்பாக கொழும்பு மாநகர ஆணையாளர் இதன்போது கருத்து தெரிவித்ததுடன், கொழும்பு நகரின் கழிவுகளை வெளியேற்றலுக்கான பொறுப்பினை ஜனாதிபதி மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரியவிடம் கையளித்துள்ளார்.

மேலும் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளின்போது உள்ளூராட்சி நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன்,

 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அவசியமான இயந்திரங்கள் மற்றும் வாகனங்களைப் பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு வேண்டுகோள்களும் இதன்போது முன்வைக்கப்பட்டன.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, வஜிர அபேவர்தன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சஜித் பிரேமதாச, பைசர் முஸ்தபா, கயந்த கருணாதிலக்க, சாகல ரத்நாயக்க, சுசில் பிரேம ஜயந்த ஆகியோரும், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உள்ளூராட்சி நிறுவனத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் பிரதானிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு