செய்தி விவரங்கள்

இரண்டாவது நாளாகவும் தொடரும் பணிபுறக்கணிப்பு நடவடிக்கை

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு மலையக அஞ்சல் அலுவலக பணியாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா, காலி, கண்டி ஆகிய இடங்களிலுள்ள தபால் நிலைய கட்டடங்கள் உள்ளிட்ட பல கட்டடங்களை ஹோட்டல் நிர்மாணத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானம் கைவிடப்பட வேண்டும்,

தற்போது தனியார் கட்டடமொன்றில் கூலிக்கு நடத்திச் செல்லப்படும் பிரதான தபால் நிலையம் அதிலிருந்து அகற்றப்பட்டு கொழும்பில் ஜனாதிபதி மாவத்தையில் அமைந்துள்ள பிரதான தபால் காரியாலயத்தில் அமைக்க வேண்டும், மற்றும் 2006ஆம்6.6 இலக்க சுற்றுநிருபத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாக தபால் சேவைக்கு ஊழியர்களை இணைத்துக் கொள்வதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகயும் முன்வைத்து தபால் ஊழியர்கள் இந்தப் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைய நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை ஆகிய பிரதான அஞ்சல் அலுவலகம் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலும் தபால் ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு நடவடிக்கைக்கு  ஆதரவு தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பில் 28 தபால் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள 3410 உப தபால் அலுவலகங்களிலும்  640 தபாலகங்களிலும் இன்று சேவைகள் இடம்பெறாது என தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு