செய்தி விவரங்கள்

மஹிந்தவின் மற்றுமொரு விசுவாசியின் பதவி பறிப்பு

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மற்றுமொரு விசுவாசியான தென்மாகாண சபை அமைச்சர் வீரசுமுன வீரசிங்கவின் அமைச்சுப் பதவிகள் இன்றைய தினம் அதிரடியாகப் பறிக்கப்பட்டுள்ளன. 

மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கத்தில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதி அமைச்சராக பதவி வகித்த மற்றுமொரு மஹிந்த விசுவாசியான அருந்திக்க பெர்ணாண்டோவின் பதவி நேற்றைய தினம் பறிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று தென் மாகாண அமைச்சர் வீரசுமுன வீரசிங்கவின் அமைச்சுப் பதவிகளும் பறிக்கப்பட்டிருக்கின்றன.

தென் மாகாண சபையின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பதவி வகித்த வீரசுமுன வீரசிங்க அமைச்சுப் பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ள முதலமைச்சர் ஷான் விஜேலால் த சில்வா அவர் வகித்த அமைச்சுப் பொறுப்புக்களையும் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றுவதற்காக பாடுபட்டுவரும் கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்படுவதாக தொடர்ச்சியாக குற்றம்சாட்டப்பட்டுவரும் நிலையிலேயே வீரசுமுன வீரசிங்க அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. 

அண்மையில் மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கம் கொண்டுவந்துள்ள 20 ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் தென் மாகாண சபையில் வாக்கெடுப்பிற்கு வந்தபோது வீரசுமன வீரசிங்க அதற்கு எதிராக வாக்களித்திருந்தார்.

இதற்கமை அவர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைத்துள்ள தேசிய அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்புக்களுக்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையிலேயே இன்றைய தினம் அவரது அமைச்சுப் பதவிகளை தென் மாகாண முதலமைச்சர் பறித்திருக்கின்றார். 

இதேவேளை மைத்ரி – ரணில் தலைமையிலான ஸ்ரீலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக பதவி வகித்த சுதந்திர கட்சியைச் சேர்ந்த அருந்திக்க பெர்ணாண்டோவும் நேற்றைய தினம் பிரதி அமைச்சர் பதவியிலிருந்து  நீக்கப்பட்டார். 

அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்பை மீறிய குற்றச்சாட்டில் பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அருந்திக்க பெர்ணாண்டோ ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவினால் நீக்கப்பட்டார்.

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதி அமைச்சராக பதவி வகித்துவந்த அருந்திக்க பெர்ணாண்டோ சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டங்களின் போதும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடனான சந்திப்புக்களிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு சார்பாக கருத்துக்களை வெளியிட்டுவந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

தென்மாகாண சபை அமைச்சர் வீரசுமுன வீரசிங்கவின் 14 பிரிவுகளுக்கு பொறுப்பான அமைச்சுகள் இன்று பறிக்கப்பட்டுள்ளது.

இந்த 14 அமைச்சுக்கள் அனைத்தையும் முதலமைச்சர் சான் விஜேலால் சில்வா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டமைக்காக இவரது அமைச்வு பதவிகள் பறிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு