செய்தி விவரங்கள்

தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது ஸ்ரீலங்கா - உபுல் தரங்கவிற்கு 2 போட்டிகள் தடை

ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் நேற்றைய தினம் இடம் பெற்ற 3ஆவது போட்டியில் ஸ்ரீலங்கா அணி 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவிடம் தோல்வியடைந்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி பெற்றுக்கொண்ட இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொண்டுள்ளது.

நேற்று முன்தினம் இங்கிலாந்தில் தொடங்கிய சம்பியன் கிண்ணத் தொடரில்  நடப்பு சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.

நேற்றைய தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்ரீலங்கா அணி மற்றும் தென் ஆபிரிக்கா அணிகள் பலப்பரீட்சையை நடத்தியிரந்தன.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா தென்னாபிரிக்க அணியை முதலில் துடுப்பெடுத்தாடும் படி பணித்தது.

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்களைக் பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்கா சார்பில் ஹஷிம் அம்லா 103 ஓட்டங்களையும்  டூ பிளெஸிஸ் 75 ஓட்டங்களையும் குவித்தனர்.

இதை தொடர்ந்து 300 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஸ்ரீலங்கா 41 தசம் 3 ஓவர்களின் முடிவில் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து  203 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

ஸ்ரீலங்கா அணி சார்பில் உபுல் தரங்க 57 ஓட்டங்களையும் குசல் ஜனித் பெரேரா 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய தென்னாபிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை, இந்த போட்டியின் போது பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு ஸ்ரீலங்கா அணியை தற்போது தலைமை தாங்கும் உபுல் தரங்கவிற்கு நடப்பு சம்பியன்ஸ் கிண்ண தொடரின் இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் காயம் காரணமாக குறித்த போட்டிகளில் விளையாடாததினால் ஸ்ரீலங்கா அணியை உபுல் தரங்க வழிநடத்தியிருந்தார்.

இந்த நிலையில் சம்பியன்ஸ் கிண்ண தொடரின் அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளில் தலைவராக யார் செயற்படுவார் என்பது குறித்த தீர்மானத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு