செய்தி விவரங்கள்

நடிகை பாவனா வழக்கில் நடிகர் திலீப்புக்கு என்ன தொடர்பு??

நடிகை பாவனா வழக்கு தொடர்பாக நடிகர் திலீப் மற்றும் இயக்குநர் நாதிர்ஷா ஆகிய இருவரிடமும் காவல்துறையினர் 12 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளார்கள். நடிகை பாவனா தனது காரில் படப்பிடிப்பு முடித்துவிட்டு கொச்சியிலிருந்து திருச்சூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு வேனில் வந்த மர்ம நபர்கள் அவரை காருடன் கடத்திச் சென்றனர். அப்போது பாவனாவைத் துன்புறுத்தி, அந்தக் காட்சியைப் புகைப்படமாகவும், விடியோவாகவும் அவர்கள் பதிவு செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின், பிரதீப், சலீம் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளான பல்சர் சுனி மற்றும் வி.பி. விஜேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தார்கள். இவ்வழக்குத் தொடர்பாக காவல்துறையினர் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கில் திலீப்பின் பெயரைச் சொல்லாமல் இருக்க தங்களுக்குப் பணம் தரவேண்டும் என்று பல்சர் சுனியும் சுரேந்திரனும் நடிகர் திலீப் மற்றும் இயக்குநர் நாதிர்ஷா ஆகிய இருவரையும் மிரட்டியுள்ளார்கள். இதையடுத்து திலீப், நாதிர்ஷா ஆகிய இருவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள். விஷ்ணு என்பவர் இருவருடைய நண்பரான அப்புன்னியைத் தொலைப்பேசியில் அழைத்து ரூ.1.50 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். சிறையில் பல்சர் சுனியும் விஷ்ணுவும் ஒரு அறையில் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்கள். விஷ்ணு ஒரு செயின் பறிப்பு வழக்கில் கைதாகி பிறகு விடுதலை ஆகியுள்ளார். இந்த வழக்கில் சிக்கவைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதற்காக உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படவும் தான் தயார் என திலீப் அறிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து கொச்சி காவல்துறையினர் நடிகர் திலீப் மற்றும் இயக்குநர் நாதிர்ஷா ஆகிய இருவரையும் 12 மணி நேரம் விசாரணை செய்தார்கள். பாவனாவுக்கு நேர்ந்த சம்பவத்துக்கும் திலீப்புக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா, அதன் அடிப்படையில் இருவரிடமும் பணம் பறிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்கிற கோணங்களில் இருவரிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணை முடிந்தபிறகு பேட்டியளித்த திலீப், என்னிடமுள்ள அனைத்துத் தகவல்களையும் காவல்துறையிடம் தெரிவித்துவிட்டேன் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு