இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி ஊழல் மோசடி; சூடான நாடாளுமன்றம்!

15shares
Image

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி ஊழல் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றதாக கூறப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் 118 பேர் விவகாரம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்றைய தினமும் சூடான வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் என்ற பட்டியலொன்று தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் சபையில் இன்று (08.06.2018) பதிலளித்தார்.

நாடாளுமன்றம் இன்று பகல் ஒருமணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான பணிகளுக்கு செல்ல முன்னர் சிறப்புரிமை பிரச்சினையொன்றை ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜித் த சொய்ஸா எழுப்பினார்.

ரஞ்ஜித் டி சொய்ஸா நாடாளுமன்ற உறுப்பினர் - ‘பேர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொண்டவர்களின் பெயர்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகளில் வெளியிடப்பட்டுவரும் தகவல் குறித்து நேற்று முன்தினம் சபையில் சிசிற ஜயகொடியுடன் இணைந்து கருத்துக்களை முன்வைத்தேன். அந்த நபர்களை அரச தொலைக்காட்சியொன்றில் அழைத்து கொலைகாரர்கள், திருடர்கள், குண்டர்கள் என்ற வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டு எங்கள் மீது சேறு பூசியதால் எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் தற்போது பேசுபொருளாக உள்ள பணம் பெற்றுக்கொண்ட 118 பேர் அல்லது 166 பேர் உட்பட அர்ஜுன் அலோசியஸிடம் பணம்பெற்றுக்கொண்ட எம்.பிக்களின் பெயர்கள் அடங்கிய விபரங்களை சபையில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்”

கரு ஜயசூரிய சபாநாயகர் - ‘கௌரவ உறுப்பினர் அவர்களே அப்படியொன்று இல்லை என்பதை நேற்று நான் சபையில் பிரசித்தமாகவே தெரிவித்திருந்தேன். இதுகுறித்து மாதகாலமாக பேசமுடியும்”

ரஞ்ஜித் டி சொய்ஸா நாடாளுமன்ற உறுப்பினர் - ‘ஆம். எனக்கும் அதுதெரியும். சட்டமா அதிபரிடம் நீங்கள் கேட்டீர்கள். ஜனாதிபதி செயலாளரிடமும் கோரியிருந்தீர்கள். ஆனால் சமூகத்தில் குற்றச்சாட்டை சிலர் எதிர்கொண்டிருக்கிறார்கள். எனவே சபையில் உரைநிகழ்த்தும் எங்கள் மீது சேறுபூசுவதல்ல, அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும். எனவே அரச ஊடகங்களைப் பயன்படுத்தி அவமானப்படுத்தும் வார்த்தைகளை எங்கள் மீது மேற்கொள்வதால் அலோசியஸிடம் பணம் பெற்றவர்களும் நிரபராதிகளாகி விடுகின்றார்கள். உடனடியாகவே பணம் பெற்றவர்கள் விபரங்களை வெளியிடுமாறும் இன்றும் கோருகிறேன்”

கரு ஜயசூரிய சபாநாயகர் - ‘அப்படியொரு 164 பேரோ அல்லது 118 பேரோ இல்லை என்றுதானே நான் திரும்பவும் கூறுகிறேன். இல்லாத ஒன்றை நான் எப்படி பெற்றுக்கொடுப்பது? பொலிஸாரும், சட்டமா அதிபரும் இல்லை என்று கூறுகிறார்கள் என்றால் என்ன செய்வது? இருந்த போதிலும் பொலிஸார் விசாரணை நடத்துகிறார்கள் என்பதை நான் நேற்றும் தெரிவித்தேன்”

இதன்போது குறுக்கீடு செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சேரசிங்க, கோப் குழுவில் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கும் உறுப்பினர்களை நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, கோப் குழுவில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள உறுப்பினர்களுக்குப்பதிலாக புதிய உறுப்பினர்களை நியமிப்பது குறித்து கட்சித் தலைவர்கள் மத்தியில் இணக்கம் எட்டப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதேவேளை இதன்போது சபையில் கருத்து வெளியிட்ட ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேவீர, நாடாளுமன்ற உறுப்பினரையோ அல்லது அவர்களது பாதுகாப்பு அதிகாரிகளையோ விசாரணை செய்யவில்லை என்று பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு தரப்பில் கூறப்பட்ட போதிலும், எமது உறுப்பினர் ஒருவரதும், அமைச்சர் ஒருவரதும் பாதுகாப்பு அதிகாரிகளை விசாரணை செய்தபோது இன்னுமொரு காலோலை பரிமாற்றம் குறித்த தகவல் வெளிவந்ததாக நேற்று நீதிமன்றத்தில் கூறப்பட்ட நிலையில், சபாநாயகருக்கு வழங்கப்பட்ட தகவலை பொலிஸ்மா அதிபர் சார்பாக திரிபுபடுத்தப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

இதனை நிராகரித்த சபாநாயகர், 25 நாடாளுமன்ற உறுப்பினர்களது அதிகாரிகள் மீது விசாரணை செய்ததுவும், இந்த விவகாரமும் இரண்டு விடயம் என்பதால் இதனை குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று பதிலளித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, இந்த அரசாங்கத்தின் கீழ் மிகவும் சுயாதீனமான விசாரணை இடம்பெறுகிற படியினால் அனைத்தும் அம்பலப்படுத்தப்படுவதால் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களும் அம்பலமாகும் என்று கூறினார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!