நிலமே எங்கள் உரிமை.. உரிமையை மீட்போம் - காலா திரைப்பட விமர்சனம்.!

48shares

நடிப்பு : ரஜினிகாந்த், ஹிமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ்,

இசை : சந்தோஷ் நாராயணன்

இயக்கம் : பா.ரஞ்சித்

ஒளிப்பதிவு : முரளி.ஜி

சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக சாதியின் பெயரால் - மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டு கிடக்கிற மக்களின் வாழ்வியல் சூழல்களை, பொதுப்புத்தியில் பதிந்திருந்த அவர்கள் குறித்த சித்திரங்களை கடந்து அவர்களின் வாழ்க்கை முறையினை, கொண்டாட்டங்களை எப்போதும் தனது கதைகளின் வழி அப்பட்டமாக பதிவு செய்கிறவர் இயக்குனர் பா.ரஞ்சித்.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி என அவரின் திரைப்படங்கள் தொடர்ச்சியான பெரு வெற்றியை பெற்றவண்ணமே இருந்தாலும் ரஜினியுடன் ரஞ்சித் இணைந்திடும் இரண்டாவது படம் இது என்பதால் ரசிகர்களின் மத்தியில் அதிகப்படியான ஆர்வம் கிளம்பியிருந்தது. அவ்வப்போது வெளியிடப்பட்ட பாடல்களும் ரசிகர்களின் ஆர்வத்தினை அதிகப்படியாக தூண்டியிருந்தன.

காவிரி விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு என சில விவகாரங்களில் ரஜினி தெரிவித்த கருத்து அவருக்கு எதிராக கிளம்பிய நிலையில்தான் காலா வெளியாகியுள்ளது.

மும்பை, தாராவி பகுதியில் வாழ்ந்துவருபவர் காலா. மனைவி செல்வி (ஈஸ்வரி ராவ்) மற்றும் மகன்களோடு வாழ்ந்துவருகிறார். அந்த குடிசைப் பகுதியை கையகப்படுத்தி, மிகப் பெரிய கட்டுமானத் திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறார் அரசியல்வாதியான ஹரிதாதா (நானா படேகர்). ஹரிதாதாவுடனான மோதலில் மனைவி, மகனைப் பறிகொடுக்கிறார் காலா. முடிவில், கட்டுமானத் திட்டத்தை நிறுத்தி அவரிடமிருந்து தாராவியை காலா எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துவரும் நகர்ப்புற நிலவுடமை குறித்த கதையை ஒடுக்கப்பட்ட மக்களின் பின்னணியில் சொல்லியிருக்கிறார் ரஞ்சித். ஒடுக்கப்பட்டவர்களிடம் இருக்கும் சிறு துண்டு நிலத்தையும் அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி தொடர்ந்து பறிக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள், அதை எதிர்த்து ஒடுக்கப்பட்டவர்கள் எப்படிப் போராடிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது என்பதையே இந்தப் படம் சொல்கிறது.

சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி அவுட் ஆனபடி அறிமுகமாகிறார் ரஜினிகாந்த். பிறகு படம் நெடுக அவருடைய ஆட்டம்தான். நரைத்துப்போன தாடியுடனும் சுருக்கிய சருமத்துடனும் தோற்றமளிக்கும் ரஜினி, தன் அனாயாசமான நடிப்பாலும் பாணியாலும் வெகுவாகக் கவர்கிறார்.

தன் முன்னாள் காதலியை சந்திக்கவரும் காட்சியும், காவல் நிலையத்தில் அமைச்சரை "யாரு இவரு" என்று கேட்டு நோகடிக்கும் காட்சியும், வில்லனின் வீட்டுக்குள்ளேயே புகுந்து எச்சரிக்கும் காட்சியும் ரஜினியால் மட்டுமே செய்யக்கூடியவை. ஒரு பாலத்தில் நடக்கும் சண்டைக் காட்சி அவரது ரசிகர்களுக்குப் பெரிய விருந்து. வில்லனாக நானா பட்டேகரும் அசத்தியுள்ளார். இதர பாத்திரங்களும் தங்களுக்கான பங்களிப்பினை சரியாகவே செய்துள்ளன.

ராவணன் கொடூரன் என சித்தரிப்பினை தகர்த்து எரியும்படி காலாவில் இராவணன் குறித்த குறியீடுகளை பயன்படுத்தியிருப்பதுடன், வில்லனின் கொடி உள்ளிட்டவற்றை காவி வண்ணத்தில் அமைத்து இந்துத்துவ சக்திகளை பகிரங்க படுத்தியுள்ளார் ரஞ்சித். திரைக்கதை, இயக்கம் உள்ளிட்ட விடயங்களில் எவ்வித சமரசங்களை இன்றி தனக்கான வேலைகளை கச்சிதமாக செய்துள்ளார் ரஞ்சித்.

எளிய மக்களுக்கு எதிராக அதிகார வர்க்கங்கள் எப்படி தனது கரங்களை விரிக்கும் என்பதனையும் காலா கச்சிதமாகவே பதிவு செய்துள்ளது.

ஒளிப்பதிவு, இசை, பாடல்கள் உள்ளிட்டவை கதைக்களத்திற்கு மேலும் வலுவூட்டுவனவாகவே அமைந்துள்ளது.

மொத்தத்தில் இயக்குனர் ரஞ்சித் தனக்கான அரசியலை உச்ச நட்சத்திரமான ரஜினியைக் கொண்டு உரக்க பேசியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பினுக்கு ஏற்ப வெளியாகியுள்ள காலாவில் சமூக கருத்துக்களும் நிறையவே நிறைந்துள்ளது.

சமூக அவலங்களை சாடி எழுவானவே மக்களுக்கான கலைகளாக இருந்திட முடியும். நாம் அந்த வகையில் பார்த்தோமெனில் காலா நிச்சயம் மக்களுக்கான திரைப்படம் தான்.

இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?